கோவையில் பணம், நகைக்காக பெண்ணை கொலை செய்த இருவர் கைது

கோவையில் பணம், நகைக்காக பெண்ணை கொலை செய்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்திரா ஜோதி, சுரேஷ்.

கோவையில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து செல்போன் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் - செட்டிபாளையம் சாலை அபிராமி நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (32). பிசியோதெரப்பிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை கணவர் வந்து பார்த்த போது தனலட்சுமி மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் செயின் மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து கணவர் பாலா இசக்கிமுத்து செட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல் துறையினர் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். முன்னதாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் உட்பட இருவர் தனலட்சுமி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மதியம் கிளம்பியது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து பொள்ளாச்சி ஆனைமலை காட்டூரில் பதுங்கியிருந்த பெண் உட்பட இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த தங்கராஜ் மனைவி சந்திரா ஜோதி (41). பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (39). என்பதும் இவர்கள் இருவரும் கோவை பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதில் சந்திரா ஜோதி மீது பழைய வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட தனலட்சுமியிடம் அதிகளவு பணம் வைத்திருப்பதாக நினைத்து அந்த பணத்தை கொள்ளையடிக்க சந்திரா ஜோதி நினைத்துள்ளார். பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு கடந்த 31 ஆம் தேதி, சந்திரா ஜோதி, சுரேஷை அழைத்து சென்றுள்ளார். அப்போது தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீடு முழுவதும் தேடி பணம் கிடைக்காதால் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போனை திருடி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரை கைது செய்த காவல் துறையினர் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!