பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; ஆர்வத்துடன் கண்டு ரசித்த மக்கள்
பலூன் திருவிழா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியின் அழகை கண்டு கண்டு ரசிக்கவும், சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது.
சர்வதேச பலூன் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் திரள்வது வழக்கம். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்து கொண்டே கண்டுகளிக்கலாம். இவை தரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். ஒரு பலூனில் மூன்று பேர் வரை பறக்கலாம்.
நேற்று பலூன் திருவிழாவிற்கான சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் சோதனை ஓட்டத்தை பார்க்க அதிகாலையில் வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா சுற்றுலா துறை சார்பில் இன்று துவங்கியது. இந்த பலூன் திருவிழா இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட், பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படும். 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள், பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் உள்ள பலூன்கள் உள்ளிட்டவை பறக்கப்பட உள்ளன.
குழந்தைகளை கவரும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன. இந்த பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
நிலை நிறுத்தப்பட்ட பலூனில் ஏற ஒரு நபருக்கு 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதிகாலை வானில் பறந்த பலூன்கள் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு கண் கவரும் விதமாக உள்ளது எனவும், புதிதாக குழந்தைகளை கவரும் விதமாக பலூன்கள் உள்ளதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த வருடம் போட்டி நடத்தும் வெளிநாட்டு நபர்கள் மட்டுமே பலூனில் பறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், பொதுமக்களும் பலூனில் பறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu