‘எலி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யப்படும்' -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘எலி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்யப்படும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

எலி காய்ச்சல் குறித்து கள ஆய்வு செய்ய மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடக் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் சிறார் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 887 இடங்களில் இந்த நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. மேலும், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களின் முன்னெடுப்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 37,173 நபர்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்துக்கான புதிய அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அட்டைகள் இன்று வழங்கப்பட்டது. மேலும், ஐந்தாயிரம் நபர்களுக்கு பட்டா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, சிறு வணிகர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் வழங்கப்பட்டன.

இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பிலும், ஒருங்கிணைந்த பரிசோதனை கூட கட்டிடம் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும் இன்று திறக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு கோவிட் காலகட்டத்தின் போது நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவ நிறுவனங்களிலும் புதிய செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணி காலம் முடிவுற்று தொடர்ந்து பணிவிடுவிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்களை நிரந்தர அரசு பணியாளர்களாக ஆக்க கோரிக்கை வைக்கப்பட்டது. நெருக்கடியான காலகட்டத்தில் அவர்கள் வேலை செய்ததன் அடிப்படையில் முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 977 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி நியமான ஆணைகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். கடந்த வாரம் 1021 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எலி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இது குறித்து கள ஆய்வு செய்ய மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு சுத்தமான குடிநீர் சேவை மற்றும் சுகாதார சேவைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மருத்துவத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்படும் காலி பணியிட தேர்வுக்கு பதிவு செய்து அரசு நிரந்தர பணியை பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!