பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொங்கல் விழா கொண்டாட்டம்
பொள்ளாச்சி அருகே தி.மு.க. சார்பில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.பல்வேறு தரப்பினரும் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கடைசிவேலை நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்றே பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அரசு உயர் அதிகாரிகள் கூட சக ஊழியர்களுடன் குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். உதாரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் பொங்கல் விழாவில் போட்ட குத்தாட்டம் இணைய தளத்தில் வைரல் ஆனது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழைய சர்க்கார்பதி என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது.
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, பெண்கள் மோட்டார் கிளப் தலைவர் நிவேதா ஜெசிகா ஏற்பாட்டில் இந்த பொங்கல் விழா கொண்டப்பட்டது. அப்போது மலைவாழ் மக்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிவேதா கூறுகையில், “கடந்த நான்கு வருடங்களாக தைத்திருநாள் பொங்கல் தின விழாவை கொண்டாடி வருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கல்லூரி மாணவர்கள் நடனம் என மலைவாழ் மக்களை மகிழ்விக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு வழங்கப்பட்டது. மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். இதில் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu