கோவை மாவட்டத்திற்கு 13 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை மாவட்டத்திற்கு 13 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
X

விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்

ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது, 1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

மேலும் 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், க.இராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உறுதியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு, துணிவோடு பொள்ளாச்சிக்கு வருகை தந்துள்ளேன். தமிழர்களின் பெருமைகளை இழிவுபடுத்துவோருக்கு பதிலடி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் சிலர் வாட்ஸ் ஆப் யுனிவர்சிட்டி மூலம் தமிழ்நாடு வளர்ச்சி அடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் என்றார்.

மேலும் கோவை மாவட்டத்திற்கு 13 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 3 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேம்பால பணிக்காக அகற்றப்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்படும்.

ஈரோடு மாவட்டத்திற்கு புதிதாக 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். கொடுமணல் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை காட்சிப்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய 5 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். நீலகிரி மாவட்டத்திற்கு 4 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். உதகை தவரவியல் பூங்கா உலகத்தரத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இப்படி ஒரு கோப்பில் கையெழுத்திடுகிறேன் என்றால் பல கோடி மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தம். இப்படியான அறிவிப்புகளை அதிமுகவினரால் சொல்ல முடியுமா? பெண்களை பெற்றவர்களை பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது அந்த ஆட்சியில் தான். அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். அதை நான் மறந்துவிடவில்லை.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, குட்கா, கஞ்சா வழக்கில் அமைச்சரின் பெயர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு. இந்த கூட்டணி பிரிந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம்பக்கமாக விளம்பரம் செய்துவருகிறார்கள்.

அனைவருக்கும் 15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதம் என்னாச்சு? தமிழ்நாட்டிற்கு வந்த எந்த திட்டத்தை இதுவரை தடுத்தோம் என்பதை கூறவேண்டும். அண்டப்புளுகு ஆகாசப்புளுகு போல் இது மோடி புளுகு. பொய்யும், வாட்ஸ் அப் வதந்திகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு. அவை தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது.

அதிமுக - பாஜக கள்ள கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, பாசிசத்தை வீழ்த்த, தமிழ்நாட்டை உயர்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்றார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா