கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது
கைது செய்யப்பட்ட வங்கதேச இளைஞர்கள்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆலைகளில் பணி புரியும் வெளி மாநிலத்தவர் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல் துறையினர் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாணிக்கம்பாளையம் பகுதியில் தனியார் உள்ள அகஸ்தான் நிட் என்ற தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அர்ஜு (26), போலாஸ் பர்மன் (28) ஆகிய இருவர், உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது அர்ஜு கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் டெய்லராக பணி புரிந்து வந்ததுடன், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றதும், 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூர் பகுதியில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu