ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ஏஐ கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள்
யானைகளை கண்காணிக்கும் ஏஐ கேமரா
கோவை மாவட்டம் மதுக்கரை முதல் கேரள மாநிலம் வாளையார் வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் தடத்தில், இரவு நேரங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகின்றது. யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க, யானை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கபட்டது. இதனுடைய மற்றுமொரு முயற்சியாக யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் விதமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொறுத்த வனத்துறை முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில்பாதைகளின் அருகில் 12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் வனத்துகை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தையும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறத்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ”வாளையார், ஆனைகட்டி சோளக்கரை இருட்டுப்பள்ளம் பகுதிகள் யானைகள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். யானைகளின் வழித் தடங்கல் ஏற்படுவதன் காரணமாக மனித விலங்கு மோதல் நடைபெறுகிறது. யானைகள் வழித்தடத்தில் ஏற்படும் மாற்றம், அதன் உணவு முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 928 முறை வனத்தை விட்டு யானைகள் வெளியேறியுள்ளது. ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பது கவலைக்குரியது. சோளக்கரை பகுதியில் இரண்டு ரயில் பாதைகளின் நடுவில் உள்ள பகுதிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருகிறது. அவ்வாறு வரும்போது விபத்து ஏற்பட்டதில் 11 யானைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளது. சுரங்க பாதை ஏற்படுத்தினாலும் அது நிரந்தரதீர்வு இல்லை. யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரம் கண்காணிக்க நவீன செயற்கை நுண்ணறிவு கேமரா நிறுவ 7 கோடியே 24 லட்சம் செலவு செய்யப்பட்டு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் யானைகளை கண்காணிக்க முடியும்.
2023ல் துவங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. யானைகள் கடக்கும் இடங்களில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை அருகே யானைகள் வரும்போது, இந்த கேமிரா கண்காணிப்பு மையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கிறது. விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் விபத்தை தடுப்பது, தனிப்பட்ட யானைகளின் நடவடிக்கைகளை கண்டறிவது போன்ற பயன்பாடுகள் இந்த கேமரா மூலம் மேற்கொள்ள இயலும். யானைகளை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டம் இதுவரை யாரும் அறிமுகப்படுத்தாத திட்டம், மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் காக்கும் அரசு தற்போதைய அரசு” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu