அரசியல் கட்சி துவங்கிய பின்னரும் நடிகர் விஜய் படங்களில் நடிப்பார் : நடிகர் அர்ஜூன் தாஸ்..!
போர் திரைப்பட குழு
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவான போர் திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே மாலில் அத்திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய் நடிகர் அர்ஜுன் தாஸ், ”போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும். வில்லன் கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரம் இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன்.
இந்த படத்தில் நான் வில்லனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். மக்கள் எதனை ஏற்றுக்கொள்கிறார்களோ அதனை தொடர்ந்து செய்வேன். லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும்” என தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு, ”நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார். அரசியல் கட்சி துவங்கிய பின்பும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என நம்பிக்கை உள்ளது.
அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்” என பதிலளித்தார். பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், ”இது ஒரு கனவு போல் உள்ளது. இந்த படம் பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். இந்த படத்தை பற்றி நினைக்கும் போதே பல்வேறு நல்ல நினைவுகள் தான் நினைவிற்கு வருகிறது.
விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன் அது போன்ற சமூக அக்கறை உடைய படங்களை நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தேன்.
ஆனால் நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்கிறேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், ”இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை. சமூகம் சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கி உள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என்பதால் பயன்படுத்தினேன்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu