கோவை அருகே காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 5 பேர் கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டவர்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து விளை பொருட்களை சாப்பிட்டு வருகிறது.
இதனை தடுக்க சிலர் சட்ட விரோதமாக அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை பயன்படுத்துகின்றனர். உணவு பொருட்களில் வைக்கப்படும் இந்த நாட்டு வெடியை கடித்து, வாய் சிதறி காயம் ஏற்பட்டு காட்டுப்பன்றி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடி குண்டு பயன்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தேடுதல் வேட்டை மற்றும் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் அருகே உள்ள நீலாம்பதி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மருதன், ரங்கசாமி, அப்பய்யன், வெள்ளிங்கிரி ஆகியோர் அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடியது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu