கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

கோவை விமான நிலையத்தில் 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க சுங்கவரித்துறை அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் ஒரு பயணியின் நடவடிக்கையில அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அவருடைய பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபரின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.அந்த நபரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !