கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு

கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழப்பு
X

காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சண்முகம்

கோவை அருகே காட்டு யானை விரட்டியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மருதமலை அருகேயுள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை கட்டிடத்திற்கு அருகில் உள்ள முட்புதரில் ஒற்றை காட்டு யானை நிற்பதாக காவலாளிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் அங்கே சென்று யானையை விரட்ட முயன்றனர். அப்போது திடீரென அந்த ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டு விரட்டி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடி உள்ளனர். அப்போது இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் சண்முகம் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதே சமயம் யானை வந்த தகவலை அறிந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் லட்சுமண பெருமாள் சாமி சுற்றுச்சூழல் துறை கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது யானை பிளிறியதில் பயத்தில் கீழே விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரையும் மீட்டு வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”பாரதியார் பல்கலைக் கழகப் பகுதியில் யானைகள் உள்ளதா என்று தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்து வரப்படுகிறது. மேலும் பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் வன விலங்குகளிடமிருந்து பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்கனவே நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிக்கு காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture