காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்
X

கோவை குற்றாலம்

காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 16 ம் தேதி பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் நேற்று மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பாரம்பரிய வழக்கம். இந்த நாளில் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் நேரத்தை செலவிடுவர்.

அந்த வகையில் காணும் பொங்கல் தினமான இன்று ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இயற்கை ஏழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் அமைந்துள்ளது.

இயற்கை சூழலை ரசிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களோடு அதிக அளவிலான மக்கள் படையெடுத்து வந்தனர். வனச்சோதனை சாவடியில் இருந்து மக்கள் வனத்துறையினர் வாகனங்களில் வனப்பகுதி வழியாக அருவிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கோவை மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இன்று கோவை குற்றாலம் வந்து மகிழ்ந்தனர். கோவை குற்றாலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story