மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி என்பதில் உண்மையில்லை: மைவி3 ஆட்ஸ் சக்தி ஆனந்த்

மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி என்பதில் உண்மையில்லை: மைவி3 ஆட்ஸ் சக்தி ஆனந்த்
X

சக்தி ஆனந்த்

படித்தவர்கள் தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர். பாமர மக்களை ஏமாற்றுவது என்பது அடிப்படை அற்றவை என மைவி3 ஆட்ஸ் சக்தி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோவை மாநகர காவல் துறையினர் சக்தி ஆனந்திற்கு சம்மன் அனுப்பினர். இதன் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் வழக்கறிஞர்கள் உடன் சக்தி ஆனந்த் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சக்தி ஆனந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு எவ்வாறு பணம் கொடுக்கப்படுகிறது? விற்கப்படும் பொருட்களின் விவரங்கள் குறித்து விசாரணையின் போது கேட்கப்பட்டது. என்னிடம் 87 வகையான விற்பனை பொருட்கள் உள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மாதிரிகளை சமர்பித்துள்ளேன். ஆயுர்வேதம், சித்த மருந்துகளுக்கு உரிமம் வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? நான் அது தொடர்பான மருந்துகளை தான் கொடுத்து வருகிறேன்.

காவல் துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பேன். நீலாம்பூர் பகுதியில் கூட்டிய கூட்டம் நான் கூட்டவில்லை. அதில் நானும் ஒருவனாக கலந்து கொண்டேன். கூட்டம் கூடினால் வழக்கு பதிவு செய்வது இயல்பு. ஆனால் அன்று கூடிய கூட்டத்திற்கு வழக்கு பதிந்ததாக எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கவில்லை. என்னுடைய உண்மையான கூட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஒரு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள். எந்த இடமாக இருந்தாலும், அந்த கூட்டத்தை நான் கூட்டி காண்பிப்பேன்.

பிரபலம் ஆனால் பிராபலம் வருவது இயல்பு தான். எனக்கு அரசியல் பின்புலம் கிடையாது. வியாபாரமும், விளம்பரமும் உள்ள வரை மக்களுக்கு நான் பணம் கொடுத்துக் கொண்டே இருப்பேன். மக்களின் உணர்வுகளை வைத்து மோசடி செய்கிறேன் என்பதில் உண்மையில்லை. படித்தவர்கள் தான் என்னுடைய செயலியை பயன்படுத்துகின்றனர். பாமர மக்களை ஏமாற்றுவது என்பது அடிப்படை அற்றவை” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி