NIA Raid: கோவையில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
என்.ஐ.ஏ. சோதனை நடக்கும் இடம்.
NIA Raid: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே கோவையில் உள்ள அரபிக் கல்லூரிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் இன்று காலை கோவை நகரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
உக்கடம் அல் அமீன் காலனி இரண்டாவது வீதியில் உள்ள ஏசி மெக்கானிக் அபிபூர் ரகுமான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என்ற கோணத்தில் இந்த விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, நெல்லை உட்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்திருந்தது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமைப்புக்கான ஆதரவாளர்களை திரட்டியதில் இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu