மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மைவி3 ஏட்ஸ் நிறுவனம் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
X

பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர்.

செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது, அண்மையில் கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 29 ம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது அந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த ஸ்டாலின் என்பவர் கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து துவங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. 600 ரூபாய் செலுத்தி ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறினர்.

18 ஆயிரம் ரூபாய் கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் எனவும், இல்லையெனில் 1 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என கூறினர். இதனை நம்பி பலர் முதலீடு செய்தனர். இரண்டு ஆண்டுகள் முறையாக பணம் அளித்து வந்த அந்த நிறுவனம், திடீரென ஒரேநாளில் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் மார்கெட்டிங் டைரக்டராக இருந்த சக்தி ஆனந்த் என்பவரை வைத்து தற்போது மைவி3 ஏட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சக்தி ஆனந்த் ஒரு பினாமி. இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் மீது மேலும் பலர் புகார் அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி