யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை

யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
X

கூட்டத்துடன் வந்த குட்டி யானை.

தாயை சந்தித்த குட்டி யானை, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அந்த பெண் யானைக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக உடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, நேற்று அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது.

கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு குட்டி யானை உடன் 3 ஆண் யானைகள், 2 பெண் யானை மற்றும் ஒரு 5 வயதான யானை கொண்ட யானை கூட்டம், தாய் யானை இருக்கும் இடத்திற்கு வந்துள்ளது. அப்போது தாயை சந்தித்த குட்டி யானை, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது. நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடன் சுறுசுறுப்பாகவும் உணவருந்தி வருகிறது எனவும், களப் பணியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து குட்டி யானையை கண்காணித்து வருகிறோம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture