பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல கோவையில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல கோவையில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள்
X

கோவை பேருந்து நிலையம் - கோப்புப்படம் 

கோவையில் தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையொட்டி 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக தொழில் மற்றும் கல்விக்காக வெளியூரில் இருந்து கோவையில் வந்து தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூட்ட நெரிசலை சமாளிக்க பேருந்து நிலைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி

  • சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • இதேபோல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி,கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை - மதுரை இடையே 200 பேருந்துகள், கோவை - திருச்சி இடையே 200 பேருந்துகள், கோவை - தேனி இடையே 100 பேருந்துகள், கோவை - சேலம் இடையே 240 பேருந்துகள் என மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் இந்த பேருந்து வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!