செங்கல்பட்டில் குறைந்த வாடகையில் வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள், கலெக்டர் தகவல்

செங்கல்பட்டில் குறைந்த வாடகையில் வேளாண்மை  இயந்திரங்கள், கருவிகள்,  கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத். பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த வாடகையில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுவதாககலெக்டர் ஆர்.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தில், உழுவை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340-க்கும், மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.840-க்கும், மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660- க்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் உழுவை இயந்திரங்களின் இணைப்பு கருவிகளாக வைக்கோல் கட்டும் இயந்திரம், வைக்கோல் உலர்த்தும் இயந்திரம், தென்னை கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை துகளாக்கும் இயந்திரம், திருப்பும் வசதிகொண்ட வார்ப்பு இறகு கலப்பை, கரும்பு கட்டை சீவும் கருவி என பல்வேறு புதுமையான தொழில்நுட்பம் கருவிகளும் டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே மேற்கண்ட இயந்திரங்களை வாடகைக்குப் பெற்று பயனடைய செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், நந்தனத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக அலைபேசி எண் :044-24352356, உதவி செயற் பொறியாளர் நந்தனம் அவர்களின் தொலைபேசி எண் -9444318854 -ஐயும் மற்றும் மதுராந்தகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக அலைபேசி எண் : 044-27552145, உதவி செயற்பொறியாளர் மதுராந்தகம் அவர்களின் தொலைபேசி எண்- 9444073322 -ஐயும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆர்.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story