விருதுநகரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார்.;

Update: 2021-11-27 13:37 GMT

விருதுநகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு வழங்கினார்.

பின்னர் தொழில்துறை அமைச்சர் பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும்.

முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத்தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல், வேளாண், முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை, மல்லாங்கிணறு, ஆணைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், மொட்டமலை, கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 1002 குடும்பங்களுக்கு சுமார் ரூ.64.63 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதனடிப்படையில் முதல்கட்டமாக, விருதுநகர் மாவட்டத்தில் இன்று மல்லாங்கிணறு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 110 நபர்களுக்கு ரூ.72,000 மதிப்பிலான இலவச துணிமணிகள், 36 குடும்பங்களுக்கு ரூ.54,000 மதிப்பிலான பாத்திரங்கள், 12 குடும்பங்களுக்கு ரூ.48,000 மதிப்பிலான இலவச எரிவாயு இணைப்புகள், 1 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு மகளிர் திட்டம் மூலம் 75,000 மதிப்பிலான மான்யத்துடன் கூடிய கடனுதவி ஆக மொத்தம் சுமார் ரூ.2.49 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு மருத்துவப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.76,500 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டியினை தொழில்துறை அமைச்சர் வழங்கினார். இலங்கை தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் உடைய அனைத்து நலத்திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியன் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், வட்டாட்சியர் (இலங்ககை தமிழர் மறுவாழ்வு முகாம்) கார்த்திகேயினி, காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார், மல்லாங்கிணறு முகாம் தனி வருவாய் ஆய்வாளர் திலகவதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News