திருச்சுழி அருகே தொடக்க பள்ளியில் மழைநீர் தேக்கம்: நோய் தாெற்று பரவும் அபாயம்

திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதி.

Update: 2021-12-01 08:12 GMT

திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர்.

திருச்சுழி அருகே தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி-நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மண்டபசாலை, சிலுக்குப்பட்டி, புதூர் மற்றும் எம்.ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 5 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி வளாகம் மிகவும் பள்ளமாக இருப்பதால் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் சில நாட்களாக குளம் போல் காட்சியளிப்பதால் மாணவ, மாணவிகளுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பள்ளத்தில் மண்மேவியும், மழைநீரை கடத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவியர்களும் மற்றும் பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கிராமத்தில் சுமார் 70 வருடங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இத்தொடக்கப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர் ஆசிரியர்களாகவும், இராணுவ வீரர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். இதனால் இப்பள்ளியில் எங்களது குழந்தைகளும் படிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் மழைக் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் ஒரு அடி அளவிற்கு மழைநீர் தேங்குவதால் எங்களது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுமோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்ப வேண்டியுள்ளது.

மழைநீர் தேங்குவதால் விஷசந்துக்கள் தண்ணீரில் மிதந்து குழந்தைகளை கடித்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கடந்த ஒரு வார காலமாக மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News