விருதுநகர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல்: போலீஸ் குவிப்பு

விருதுநகர் அருகே 21 கிராமங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயை அடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாவட்ட எல்லையில் பரபரப்பு.

Update: 2021-12-01 17:35 GMT

காரியாப்பட்டி அருகே கால்வாய் பிரச்சனையால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாங்குளம், ஆவியூர், அரசகுளம் உட்பட 21 கிராமங்களுக்கு வரும் தண்ணீரை வரவிடமால் கால்வாயை அடைத்து எதிர்ப்பு தெரிவித்து பாரப்பத்தி கிராம மக்கள் கால்வாயை மூடியதால் இரு மாவட்ட எல்லையில் பரபரப்பு.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சுற்றியுள்ள மாங்குளம், ஆவியூர், அரசகுளம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு நிலையூர் - கம்பிகுடி கால்வாய்த் திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுவதற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை கொண்டு செல்ல விருதுநகர் மாவட்ட டிஆர்ஓ தலைமையிலான அரசு அதிகாரிகள் கிராம மக்கள் ஒத்துழைப்போடு வரத்துக் கால்வாய் தூர்வாரி அமைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக மாங்குளம், ஆவியூர் அரசகுளம், கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மதுரை மாவட்டம் பாரப்பத்தி கிராமத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் காரியாபட்டி பகுதிக்கு வரும் கால்வாயை மறித்து மணல் சாக்குகளை போட்டு மூடி தண்ணீரை பாரப்பத்தி கண்மாய்க்கு திருப்பி விட்டனர்.

தண்ணீரை விடாமல் மறித்து எதிர்ப்பு தெரிவித்து பாரப்பத்தி கிராம மக்கள் கால்வாயை மூடியதால் இரு மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், இன்ஸ்பெக்டர் முக்கன், மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தார் சரவணன் உட்பட அரசு அதிகாரிகள் பாரப்பத்தி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடைத்து வைக்கப்பட்டிருந்த கால்வாயை அகற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும் பாதையை திறந்து வைத்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்ததால் இரு மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News