ஸ்ரீவில்லிபுத்தூர் அங்கன்வாடி மையத்தில் 7 அடி நீள நல்ல பாம்பு மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில், அங்கன்வாடி மையத்தில், 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. அங்கு, சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பதுங்கி இருந்துள்ளதை, அங்கன்வாடி ஊழியர்கள் கண்டறிந்தனர். இது குறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், மிகவும் சிரமப்பட்டு, அதே நேரம் லாவகமாக 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிக்கு சென்று விட்டனர். அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு தற்போது விடுமுறை என்பதால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. காலி சாக்குகளை, அங்கன்வாடி மையத்தில் வைப்பதால், இதுபோல் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வருவதாகவும் இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.