ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் தேங்கிய கழிவு நீர்: மாணவர்கள் கடும் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடை தூர்வாரப்படாததால் சாலையில் செல்லும் கழிவு நீரால் மாணவர்கள் நடந்து செல்லும் அவலம்.;
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடை தூர்வாரப்படாததால் சாலையில் செல்லும் சாக்கடை நீர். தேங்கியுள்ள சாக்கடை நீரில் மாணவர்கள் செல்லும் அவலம்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நேற்று மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து நிலையில் தற்போது பகலில் மழை ஏதும் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அழகர்மகன் ஓடையில் செடிகள் மற்றும் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தேங்கி தற்போது சாலையில் ஓடுகிறது.
இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துடன் சாக்கடை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதால் முக்கிய வரை நடந்து செல்கின்றனர். உடனே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் எனவும் அழகர் மகன் ஓடையை தூர்வார வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.