ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்க கூடியது ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம். கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்த குளம் நிறைந்து உள்ளது .இதனால் இந்த குளத்தில் நீச்சல் பயிற்சி மற்றும் குளிப்பதற்கு என சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் தினமும் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பெருமாள்பட்டி செக்கடி தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் கூலித் தொழிலாளி. இவரது மகன் செல்வகணேஷ் (11) அரசு நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவாவுடன் திருமுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
குளத்தில் குளிக்கச் சென்ற சில நிமிடத்திலேயே செல்வகணேஷ் நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த நண்பன் சிவா கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் சிறுவனை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து குளத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் இதுபோன்று உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.