பிளவக்கல், கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 40 கண்மாய்கள் மூலமாக சுமார் 8,500 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும்;
வருவாய்த்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் பிளவக்கல், கோவிலாறு, ஆகிய அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, ஆகிய அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் ஆகியோர் முன்னிலையில், வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் மலர் தூவி அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையிலிருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 க.அடி வீதம் 5 நாட்களுக்கும் மற்றும் பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 க.அடி வீதம் 28.02.2022 வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 40 கண்மாய்கள் மற்றும் நேரடி பாசனம் மூலமாக சுமார் 8,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிகள் பெறும்.
வடகிழக்கு பருவமழை தொடரும் பட்சத்தில் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து பருவகாலம் வரை இத்திட்டங்களின் கீழ் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . இதேபோல் அணை நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றார் .நிகழ்ச்சியின் நிறைவில் இன்று சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு பயனாளிகளுக்கு மீன் குஞ்சுகளை அமைச்சர்கள் வழங்கினர்.