ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை வேனும், லோடு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மங்காபுரம் தெருவைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் லோடு ஆட்டோவில் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிருஷ்ணன் கோயில் நோக்கி தனியார் பட்டாசு ஆலை வேன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விலக்கில் வேனும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவருடன் வந்த செல்வகுமார் மற்றும் பட்டாசு ஆலை வேனில் வந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் செல்வ குமார் என்பவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தால் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.