ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி பள்ளியில் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கி வைத்து, தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மல்லி கு.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகளை மூடியிருந்தது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வி எண்ணும் உன்னத திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மாலை நேரத்தில் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல், நன்னெறி கதைகள் உள்ளிட்டவை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இக்கிராமத்தில் பள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள பண்ணை தோப்பூரில் இரு தொடக்க நிலை மற்றும் ஒரு உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மையத்தில் மாணவர்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பாடம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னார்வலர்கள் நடத்துவார்கள் என்றார். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின் பற்றி நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராமத்திலிருந்து மாணவர்கள் மையத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.