ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்களின்றி தங்கத்தேரோட்டம்

கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி தங்கத்தேர் இழுக்கப்பட்டது

Update: 2021-08-11 03:15 GMT

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும்.ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 7 ஆம் தேதி கருடசேவையும் 9 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள்  காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோவில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடிப்பூர விழா இன்று 9 ஆம் நாளை எட்டியுள்ளது. வழக்கமாக  ஆடிப்பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவில் வளாகத்திற்கு உள்ளே நடைபெற்ற தங்கத்தேரோட்டம் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள, திருக்கோயில் பட்டர்கள்,மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி, அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடந்த ஆண்டும் இதை போல் விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்குள்ளே பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News