ஸ்ரீவில்லிபுத்தூரில் தரம் இல்லாத உரங்கள் விற்பனையா?: அதிகாரிகள் விசாரணை
தரம் இல்லாத உரங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக விவசாயிகள் கூறியதையடுத்து தஞ்சையில் இருந்து வந்த உரமூட்டைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அணைதலைப்பட்டி, கீழராஜகுலராமன், ரெட்டியபட்டி, அச்சம் தவிர்த்தான் ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் அடி உரத்திற்கு தஞ்சாவூர் பகுதியிலிருந்து தோல் கம்போஸ்ட் என்ற உரத்தை வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.
அதேபோல் தற்போது விவசாய பணிக்கு இந்த உரங்களை ஆர்டர் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த 3 பேர் நேற்று வேனில் 150 தோல்கம்போஸ்ட் மூடைகளுடன் அணைதலைப்பட்டி வந்தனர். அப்போது விவசாயி ஒருவர் இந்த உரம் தரம் இல்லாத உரம் என கூறி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் வேளாண்மை துறை அதிகாரி முத்து லட்சுமி தலைமையில் வேளாண்மைத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அந்த வேனை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த உரத்தை பரிசோதனை செய்வதற்காக வேளாண்மை துறை அதிகாரிகள் கோவைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தரமற்ற உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், தஞ்சையில் இருந்து வந்த உரம் தரமானது தானா என அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்தி வருகின்றனர்.