வனத்துறை அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.;
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது சகோதரர் லட்சுமணன். இவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் இருவர் மற்றும் அவரது தந்தை மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடைகள் திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, மலை அடிவாரப் பகுதியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு கடந்த 23 ஆம் தேதி இளைஞர்கள் இருவரும் சென்றுள்ளனர். அப்போது, வனத்துறை ஊழியர்களான பாரதி, ஜெயக்குமார், கடற்கரை ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மேல் விசாரணைக்காக இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, ராமர் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரையும் கம்பு மற்றும் கம்பியால் வனத்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
வழக்கு குறித்து விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், வனத்துறை ஊழியர்கள் தாக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராமர் மற்றும் லட்சுமணன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது, தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் இரண்டு இளைஞர்களையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மம்சாபுரம் காவல் நிலையத்தில் இளைஞர்கள் குடும்பத்தினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, வனத்துறையை கண்டித்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், ராமர், லட்சுமணன் ஆகிய இரண்டு இளைஞர்களை தாக்கிய வனத்துறை ஊழியர்கள் பாரதி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் திலீப்குமார் உத்தரவிட்டுளார்.
இந்நிலையில், மற்றொரு வனத்துறை ஊழியரான கடற்கரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதும் கடற்கரை மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவயிது. போராட்டத்தின்போது, வனத்துறைக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.