ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிக்கு சென்று இருந்தவரது வீட்டை உடைத்து இருவேறு பகுதிகளில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்ற ஆசிரியர் தேர்தல் பணிக்காக சென்றிருந்ததால் வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி, குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்புகையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16 சவரன் தங்க நகை வெள்ளிப் பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் களவு போனது தெரியவந்தது. இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் ரோட்டில் அமைந்துள்ள மகாத்மா நகரில் தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் இளங்கோவன் என்பவர் தேர்தல் பணிக்கு சென்றிருக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இதை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 59 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.