சதுரகிரி மலைக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

சதுரகிரி மலைக்கு இன்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Update: 2022-02-28 05:35 GMT

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து, தொடர்ச்சியாக 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். நாளை (28ம் தேதி) திங்கள் கிழமை, மாசி மாத தேய்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை பிரதோஷம், செவ்வாய் கிழமை மகா சிவராத்திரி, புதன் கிழமை மாசி மாத மகா அமாவாசை என முக்கிய விசேஷமான நாட்களாக இருப்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். குறிப்பாக மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து ஏராளமாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்த மாவட்டங்களிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. மகா சிவராத்திரி மற்றும் மாசி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சதுரகிரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News