விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குளத்தில் உள்ள நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரப் பகுதியில் குடியிருப்பு வீடுகள் மற்றும் கல்குளம் ஒன்று உள்ளது.இந்நிலையில் போக்குவரத்து நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டிசெல்வம் என்பவரது மகன் ஜெயப்பாண்டி(10),அதே தெருவை சேர்ந்த ஜான்சன் அந்தோணி என்பவரது மகன் ஜிவின்பால் (7) மற்றும் நண்பர்கள் 4 பேர் கல்குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவர்களின் காலணி குளத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
அதனை எடுக்க ஜெயபாண்டி, ஜிவின்பால் குளத்திற்குள் இறங்கிய போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட நண்பர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த போது அக்கம் பக்கத்தினர் உதவியோடு குளத்திற்குள் மூழ்கிய 2 சிறுவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.