சாத்தூர் அருகே விபத்தில் இறந்தவரின் உடலை வைத்து கிராமத்தினர் சாலை மறியல்
சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை சாலையில் விபத்தில் உயிரிழந்தவரின் பிரேதத்தை வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை சாலையில் விபத்தில் உயிரிழந்தவரின் பிரேதத்தை வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கமுனியாண்டி என்பவரது மகன் முத்துச்செல்வம் (21), இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவகாசியில் வேலை பார்த்து முடித்து இரவில் இருசக்கர வாகனத்தில் தனது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த போது மழைநீர் வடிவதற்காக சாலையில் வாய்க்கால் தோண்டி மூடிய பகுதி வேகத்தடை போன்று மேடாக இருந்துள்ளது.
புதியதாக வேகத்தடை போன்று இருப்பது அறியாமல் வேகமாக வந்ததால் வாகனம் குதித்து தூக்கி எறியப்பட்டுள்ளார். இந்த விபத்தில் முத்துச்செல்வம் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு 5 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
இதனால் முத்துச் செல்வத்தின் உறவினர்கள் மற்றும் அவரது ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அனுமதியின்றியும் அறிவிப்பின்றியும் வேகத்தடை போன்று அமைத்ததுதான் இவரது உயிரிழப்பிற்கு காரணம் எனவே முத்துச்செல்வத்தின் உயிர் இழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவச் செலவினை ஈடு செய்ய உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறி அவரின் உடலை சாலையில் கிடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி- கழுகுமலை பிரதான சாலையாக வெம்பக்கோட்டை சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பிணத்தை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தன்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.