சாத்தூரில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு: தேர்தல் மேற்பார்வையாளர் வாகனம் முற்றுகை
சாத்தூரில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதால், மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் அதிமுக சார்பில் ஒண்ணாவது வார்டு வேட்பாளராக வெங்கடேஸ்வரி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரி என்பவருக்கு தனது சொந்த ஊரான பெத்து ரெட்டிபட்டியிலும், 1 வது வார்டிலும் என இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக்கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு அதிமுகவினர் கூச்சலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த விருதுநகர் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பாலச்சந்தர் வாகனத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை முன்வைத்தனர். பின்னர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.