தமிழகஅரசு கடனில் தத்தளிக்கிறது- வைகோ குற்றச்சாட்டு

Update: 2021-03-24 04:00 GMT

தமிழக அரசு ரூ. 5 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக ராஜபாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெரு பகுதியில் சாத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் மதிமுக வேட்பாளர் டாக்டர் ரகுமானை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர்,ராஜபாளையம் பகுதியின் பிரதான தொழிலாக விளங்கும் மருத்துவ துணி உற்பத்திக்குப் பயன்படும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். படித்த இளம் பெண்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களின் மூலமாக ஆண்டுக்கு ஒரு முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.நீட் தேர்வின் காரணமாக உயிரிழந்த 13 மாணவர்கள் இழப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் காரணம். பொள்ளாச்சியில் 200 பெண்களுக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு ஆளும் கட்சி தான் காரணம்.தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பொதுப்பணித்துறையில் டெண்டர் விட்டதில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதல்வர் ஊழல் செய்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.ரூ. 5 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு தத்தளித்து வருகிறது .தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசு இந்தியும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது மட்டுமன்றி பணியாளர் தேர்வு திட்டத்தின் கீழ் மத்தியில் பணியாளர் தேர்வு செய்துவிட்டு மாநிலங்களுக்கு அனுப்பி விடும் திட்டதால் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழகத்தில் வேலை பார்ப்பார்கள். நமது தமிழக மக்களுக்கு வேலை கிடைக்காது.பல்வேறு கலாச்சாரங்களும் பண்பாடும் நிறைந்த நாடு சிதறிப் போகும் அளவுக்கு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.

Tags:    

Similar News