தொடர் கோடைமழை அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி;
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கோடை மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை அடுத்து நென்மேனி கண்மாய் அமைந்துள்ளது. இக் கண்மாயை சுற்றி சுமார் 370 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. அருள்புத்தூர், மாங்குடி, மீனாட்சிபுரம் மற்றும் புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் இப் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இப் பகுதியில் அதிகமான பரப்பளவில் நெல்லும், அதற்கு அடுத்தபடியாக எலுமிச்சை குறைந்த அளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக இப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்.என்.ஆர் ரக நெற் பயிர்களை நடவு செய்திருந்தனர்.
100 நாள் பயிரான நெற் கதிர்களை ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவளித்து பராமரித்து வந்தனர். போதுமான தண்ணீர் வசதி இருந்ததால் நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பயிர்கள் 80 சதவிகித வளர்ச்சியை எட்டி இருந்த நிலையில், 10 தினங்களுக்கு பிறகு அறுவடை செய்ய நாள் குறித்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை, இரவு, அதிகாலை என மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் வயலில் இருந்த பயிர்கள் அனைத்தும் தரையில் சாய்ந்து விட்டது. மேலும் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருந்ததால் சாய்ந்த பயிர்கள் அனைத்தும் தற்போது முளைத்து வருகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கதிர்கள் அனைத்தும், உரிய பருவம் எட்டாமல் சாய்ந்து முளைத்ததால் தற்போது தங்களின் முதல் அனைத்தும் வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏக்கருக்கு சுமார் 30 மூடைகளுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 5 மூடைகள் கூட முழுவதுமாக கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
சேதமான பயிர்களை கணக்கெடுக்க கோரி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அவர்கள் இது வரை கணக்கெடுக்க வரவில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே வருவாய் துறை அதிகாரிகள் நேரில் வந்து சேதமான பயிர்களை கணக்கெடுக்க வேண்டும் எனவும், சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட அருள்புத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.