திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்: வட்டாட்சியர் சமரசம்

ராஜபாளையம் சித்திரை வெண்கொடை திருவிழாவிற்கு கூட்டத்திற்கு அழைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வட்டாட்சியர் சமரச கூட்டம்

Update: 2023-04-13 08:06 GMT

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

ராஜபாளையம் சித்திரை வெண்கொடை திருவிழா தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விழா கமிட்டியினர் அழைக்காததை கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று இரவு ஈடுபட்டனர். இது குறித்து வட்டாட்சியர் தலைமையில் இன்று சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற சித்திரை வெண்கொடை திருவிழா தொண்டு தொட்டு சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழாவாகும்.

மேலும் இத்திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லம் வடக்கு தெரு, செல்லம் தெற்கு தெரு, ஆணையூர் தெரு, சீனிவாசன் புதுத்தெரு, மாடசாமி கோயில் தெரு, அம்மன் பொட்டல் தெரு, மத்திய வடக்கு தெரு உள்ளிட்ட 7 தெருக்களை சேர்ந்த ஒரே சமுதாய மக்கள் தலைமையில் சித்திரை 1-ம் தேதி சித்திரை வெண்கொடை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு விழா கமிட்டி சார்பாக ஒரு தெருவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை கண்டித்து அழைக்கப்படாத தெருவை சேர்ந்த விழா நிர்வாகிகள் தெரு பொதுமக்கள் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டிஎஸ்பி ப்ரீத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்தையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுபோன்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது குற்றம் எனவும் உங்களது கோரிக்கைகளை வட்டாட்சியர் முன்னுரையில் சமரச கூட்டம் நாளை ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு செய்துகொள்ள வேண்டும் என கூறினர்.

இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மேலும் போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து நாளை நடைபெறும் சமரச கூட்டத்தில் சமரச பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

இதையெடுத்து இன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வரும் காலங்களில் அனைத்து தரப்பினரையும் அழைத்து திருவிழா கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தினை சமரசமாக பேசி முடித்ததன் விளைவாக போராட்டத்திற்கு தயாராக வந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News