ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி கொலை, 3 பேர் கைது
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிப் படுகொலை- செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தாமரைக்கனி வயது 20 என்ற கல்லூரி மாணவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ஒன்றிய திமுக கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் வயது 48 என்பவரின் மகன் கணேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் கணபதி சங்கர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் அண்ணாமலை ஈஸ்வரனும் கைதுசெய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இன்று அண்ணாமலை ஈஸ்வரன் காலை 11 மணி அளவில் கிருஷ்ணாபுரம் ஊருக்கு ஒதுக்குப் புறம் உள்ள மூலக்கரை விநாயகர் கோவிலிலுக்கு சுவாமி கும்பிடவதற்காக சென்றார்.
அங்கு அவரைச் சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் டிஎஸ்பி நாசங்கர், சேத்தூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினார்கள்,
உடல் முழுவதும் ஏராளமான வெட்டுக்காயங்களுடன் அவர் பிணமாக மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் படை விரைவாக குற்றவாளிகளை தேடி வந்தது. இதற்கிடையே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட தாமரைக்கனியின் நண்பர்கள் குழந்தைவேல் குமார் 22, ஜெகதீஸ்வரன் 22, மதியழகன் ராஜா 26 ஆகிய மூவரும் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
தாமரைக்கனியின் படுகொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றதாக அவர்கள் மூவரும் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.