கொரோனாவால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை -விருதுநகரில் அமைச்சர்

15தினங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வளர்ச்சிபணிகளில் ஈடுபடமுடியாது என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-23 07:55 GMT

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் 15 தினங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் என ராஜபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ். எம். குமார், எம்.எல்.ஏ தங்கப்பாண்யடின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள் விடுப்பு இன்றி பணியாற்ற வேண்டும், அதிக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளை, மற்ற பொது மக்களுக்கு தெரியும் படி தெளிவுபடுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்,அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை காவல் துறையினர் முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும், குடிநீர் தட்டுப்பாடை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழை காலம் தொடங்குவதால் கொசுக்களை கட்டுப்படுத்தி, அதன் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியரும், அமைச்சரும் அதிகாரிகளுக்கு வழங்கினர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்னும் 15 தினங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் திமுக அரசை பொறுத்தவரை அரசு அதிகாரிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அரசாகத்தான் இருக்கும். பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இரண்டு தினங்களுக்குள் திருப்பி அளித்து விட வேண்டும். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது வன்முறையின்றி, மென்மையாக பொது மக்களின் தவறை சுட்டிக்காட்டும் விதமாக காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும். என்றார். விருதுநகர் மாவட்டத்தில் 39 தற்காலிக மருத்துவர்கள் உள்ளிட்ட 273 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளை அரசும், அமைச்சர்களும் செய்து வருகிறோம். விரைவில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணியை செய்து வருகிறோம். முதல்வரிடம் பாராட்டு பெறும் எண்ணத்தில் பணிகளை விரைந்து செய்து வருகிறோம். கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக விருதுநகர் இருக்க வேண்டும் என்ற நோக்கில் எங்களது பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக இறந்த நபர்களின் மொத்த கணக்கும் சரியாக காட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொற்றால் இறந்த நபர்களின் உடல்களை, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பத்திரப்படுத்தி வழங்குவதற்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News