இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவிகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சேத்தூரைச் சேர்ந்த குருபாக்கியம் (வயது 39 ). கணவரால் கைவிடப்பட்ட இவர் மகன் ரமேஷ்(15), மகள் மகாலட்சுமி(8) ஆகியவர்களுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு நரம்பியல் கோளாறு காரணமாக அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் உள்ளார். இவர்கள் குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டு வாடகை செலுத்தவும், மருத்துவ செலவு, குடும்பத்திற்கு தேவையான வாழ்வாதாரம், உணவிற்கு கூட வழியில்லாத நிலையில் உள்ளதாகவும், மகள் மகாலட்சுமி வீட்டு வேலைகளையும், தாய்க்கு தேவையான பணிவிடைகளையும் செய்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது.
அதன்பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.15,000மும், கணவரால் கைவிடப்பட்டவருக்கான மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ஆணையையும், குடும்ப அட்டை, மகன் ரமேசுக்கு படிப்பிற்காக செல்வோன், மகளுக்கு பள்ளி படிப்பிற்கு தேவையான புத்தகப்பை, குடும்பத்திற்கு தேவையான 3 மாதத்திற்கான மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மேலும், அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும், தாய் குருபாக்கியத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் ராமச்சந்திரன், தனி வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்