இராஜபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
இராஜபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் வழங்கல்
இராஜபாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் 631 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் PSK குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் தலைமையில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 631 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்த திருவிழாவில் பராம்பரிய உணவுகளான சிறுதானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்த 6 நபர்களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் பேசியபோது:- தமிழ்நாடு முதலமைச்சர் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.23,28,383/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 474 பயனாளிகளுக்கு ரூ.4,74,000/- மதிப்பிலான முதியோர் நிதி உதவித் தொகைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.5,35,500/- மதிப்பிலான மின் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.34,00,000/- மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், 29 பயனாளிகளுக்கு ரூ.13,00,000/- மதிப்பிலான கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களுக்கான நிதியுதவிகளும்;, தோட்டக்கலைத் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு 30,840/- மதிப்பிலான காய்கறி விதைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.1,51,652/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு 58,16,000/- மதிப்பிலான சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகளும் என மொத்தம் 631 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்து தர தயாராக இருக்கிறது. எனவே, பொது மக்கள் விண்ணப்பம் அளிக்கும் பட்சத்தில், அதனை பரிசீலித்து, தகுதியான பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் இராஜம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், துணைத் தலைவர் துரை கற்பகராஜ் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.