தரமான விதை வழங்க மண்டல வேளாண் அலுவலர் அறிவுரை
விழுப்புரத்தில் விதை உற்பத்தி நிலையத்தில் ஆய்வு செய்த மண்டல வேளாண் அலுவலர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் மண்டல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க அறிவுரை வழங்கினார்.
திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன், விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிற ரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்தார்.
குறிப்பாக சான்றுவிதை மாதிரிகளில் பிற ரக கலவன்கள் சரியான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறதா? என்பதையும், சான்றுவிதை மாதிரி 2636 என்ற ஆய்வக எண் கொண்ட உளுந்து விதை மாதிரியின் முளைப்புத்திறனை ஆய்வு செய்தார். மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடு குறித்த செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் இதுவரை சான்றுவிதை மாதிரிகள் 2,679 எண்களும், ஆய்வாளர் விதை மாதிரிகள் 1,425 எண்களும், பணிவிதை மாதிரிகள் 732 எண்களும் ஆக மொத்தம் 4,836 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட அளவிலான புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலவன்கள் இன்றி உள்ள விதைகளை விவசாயிகளுக்கு வழங்க செய்வதே விதைப்பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கம் என்பதை வலியுறுத்தினார். அதோடு பெறப்படும் விதை மாதிரிகளை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து வழங்குமாறு விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் இந்நிலையத்திற்கு வரும் விதை மாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து தரமான விதைகளையே, விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்ற பிறகு தற்போது வேளாண் துறை அதிகாரிகள் அவ்வப்போது விதைகளை சோதனை செய்தும் தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகளை கண்காணித்து திடீர் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து தர மற்ற விதைகளை பறிமுதல் செய்வதும் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன,
ஆனாலும் தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை தடுக்க அரசே தரமான விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு அந்தந்த பருவத்திற்கு ஏற்ற விதைகளை வழங்கினால் இது போன்ற தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகளை ஒழிக்க முடியும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்