விழுப்புரத்தில் மணிமண்டபங்கள் கட்டுவதற்கான இடத்தேர்வு
விழுப்புரம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மணிமண்டபம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார்.
திமுகவில் அமைச்சராக இருந்து உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் பாமகவில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான இட தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஜானகிபுரம் நான்குமுனை சந்திப்பில் திமுக முன்னாள் அமைச்சர் கோவிந்தசமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல் பாமக இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு செஞ்சி நெடுஞ்சாலை அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.