டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யும் மது பாட்டில்களுக்கு, அதிக பணம் வசூல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, விழுப்புரம் -சென்னை சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், இன்று திடீர் ரெய்டு நடைபெற்றது.
விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்ந்த மெல்வின் ராஜாசிங் மற்றும் ஆய்வாளர் ஜேசுதாஸ், காவலர்கள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்ம ராவ், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலகத்தில், இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இதுகுறித்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.