வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை, ஈச்சங்குப்பம் ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-09-30 09:00 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈச்சங்குப்பம் மக்கள்.

விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஈச்சங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாசு, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கிராம மக்கள், தங்கள் பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மனு அளித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு,  ஆட்டோ சின்னத்தில் அரசகுமாரி அரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜக்குபாய் முனுசாமி (50) பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், அரசகுமாரிஅரிகிருஷ்ணன், ஜக்குபாய் முனுசாமியின் ஆதரவாளர்கள், 50 மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார். எனவே, நீக்கிய எங்களை மீண்டும் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News