பொங்கல் தொகுப்பு வழங்க கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை

தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை;

Update: 2022-01-13 10:15 GMT

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர்

விழுப்புரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் வி.பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினர். 

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் கட்டுமான தொழிலை நடத்தி வருகின்றனர். கட்டுமான பொருட்களான சிமெண்ட் கம்பி, ஜல்லி, எம்-சேண்ட், செங்கல், விலை உயர்வின் காரணமாகவும், மணல் தட்டுப்பாட்டின் காரணமாகவும் தினசரி வேலை கிடைப்பதில்லை. இதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்,

இவர்கள் தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் சேர்ந்து நலவாரியம் மூலம் வழங்கக்கூடிய பணப்பயன்களை பெற்று வருகின்றனர். கட்டுமான நல்வாரியத்தில் ஆயிரம் கோடி நிதி உள்ளது. இந்நிதியிலிருந்து கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை உட்பட பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதியிலிருந்து உணவு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி துண்டு, சேலை-ஜாக்கெட் வழங்குவதுடன் மழைக்கால நிவாரணம் ரூ. 2000/- வழங்கலாம் என 14.12.2021 அன்று சென்னையில் நடைபெற்ற வாரிய கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு  வாரிய உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால் இதுவரை கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை எனவே, தாங்கள் தலையிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News