விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
Robbery News -விழுப்புரம் அருகே சாலாமேடு குடியிருப்பு பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள், அங்கிருந்த நாயின் காலை வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Robbery News -விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் குணசேகர் (வயது 60). இவர் கடந்த 10-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அவர் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைபோன்று விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் மர்ம நபர்களை பார்த்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று குரைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நாயின் காலை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோவில் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதேபோல் விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் மயிலம் அருகே கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன்(வயது19), என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அய்யனாரப்பன் கோயில் உண்டியலை உடைத்து திருடியதும், கீழ எடையாளம் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 1750 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2