விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-11-04 12:32 GMT

விழுப்புரத்தில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் ஏராளமான போலீஸார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளிமாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீஸார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸார், மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் அந்தந்த பகுதிகளில் வழித்தடங்கள் மற்றும் கோயில்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரை இச்செயலை பார்த்து வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய சாலைகளான விழுப்புரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள், புதுச்சேரி விழுப்புரம் பெங்களூர் நெடுஞ்சாலைகள், விழுப்புரம் வேலூர் நெடுஞ்சாலைகள், விழுப்புரம் சேலம் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் அந்தந்த காவல் நிலைய போலீஸார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானூர், மரக்காணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளின் பேருந்து நிலையங்களிலும், மாவட்ட அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழிப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News