டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முடிவு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வது என விழுப்புரத்தில் நடந்த சிஐடியூ கூட்டத்தில் முடிவு
சிஐடியூ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கடந்த எட்டு மாதமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்தியில் ஆளும் மக்கள் விரோத அரசு வெளியேற வலியுறுத்தியும் வருகின்ற ஆகஸ்ட் 9 ந்தேதி நடக்கும் போராட்ட ஆயத்த கூட்டம் விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமை தாங்கினார், கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார், பின்னர் போராட்டத்தை வலியுறுத்தி மாவட்டத்தில் 17 மையங்களில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம் செய்வது, போராட்டத்தை விளக்கி 50 ஆயிரம் நோட்டீசுடன் 100 கிராமங்களில் களப்பணி ஆற்றுவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் போராட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்தனர்.கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட தலைவர் பி.சிவராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி, துணைத்தலைவர் பி.குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வி.அர்ச்சுணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.